Saturday, July 7, 2012

குடியரசுத் தலைவர் தேர்தல்

குடியரசுத் தலைவர் தேர்தல் - அது என்னவென்று தெரியவில்லை! ஏதோ இந்தியா விடுதலை பெற்ற பின் இப்போது தான் முதல் முறையாக குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கப் போகிற மாதிரி நம் தொ(ல்)லை காட்சி ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்தத் தேர்தல் பற்றி தான் ஒரே பேச்சு. ஒருவேளை இது வரை நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல்களின் போது  நான்தான் நாட்டு நடப்பு தெரியாதவனாக இருந்தேனா? அல்லது இந்த முறை ஊடகங்கள் கொஞ்சம் அளவுக்கு மேல் மிகைப்படுத்துகிறார்களா (over hype குடுக்கிறார்களா) என்று தெரியவில்லை. சரி, திரும்பிய பக்கமெல்லாம் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றியே பேசுகிறார்களே, அப்படி என்ன தான் நடக்கும் இதில்? குடியரசுத் தலைவரை எப்படி தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிந்து கொள்ள எண்ணினேன். குடியரசுத் தலைவர் பற்றின எல்லா விளக்கமும் நமது இந்திய அரசியலமைப்பில் (Constitution of India) கொடுக்கப் பட்டுள்ளது குறிப்பாக குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை பற்றி article 55 ல் கூறப்பட்டுள்ளது.

இந்திய குடியரசுத் தலைவராக யார் ஆகலாம்? அதற்கு என்ன தகுதி வேண்டும்? இது போன்ற விவரங்களைத் தவிர்த்துவிட்டு முதலில் குடியரசுத் தலைவர் தேர்தல் முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

குடியரசுத் தலைவரை மக்களாகிய நாம் நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது, மக்கள் சார்பாக மக்களின் பிரதிநிதிகளாகிய MLA-க்களும் (மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்) MP-க்களும் (நாடாளுமன்ற உறுப்பினர்கள் ) தேர்ந்தெடுப்பார்கள். ஆக, குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை MLA-க்களும் MP-க்களும் தான் வாக்காளர்கள்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த MLA-க்கள் (மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்) குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்.
அதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே, சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் (Members of Legislative Council) இதில் வாக்களிக்க மாட்டார்கள்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் என்கிறோம், அதாவது மாநிலங்கள் மட்டுமே ஆனால் விலக்காக யூனியன் பிரதேசங்களான (ஒன்றியப் பகுதிகள்) புதுச்சேரி மற்றும் தில்லியின் சட்ட மன்ற உறுப்பினர்களும் (MLA) இதில் வாக்களிக்கலாம். மற்ற ஒன்றியப் பகுதிகளலெல்லாம் இல்லாமல் ஏன் தில்லி மற்றும் புதுச்சேரி மட்டும்? ஏனென்றால் தில்லி மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதிகளுக்கு மட்டும் தான் சட்டமன்றம் உள்ளது மீதமுள்ள ஒன்றிய பகுதிகளுக்கு சட்டமன்றம் கிடையாது.

சரி, மக்களின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பார்கள் என்று கூறுகிறோம், மக்கள் சார்பாக ஒரு MLA-வோ ஒரு MP-யோ அளிக்கின்ற வாக்கை (vote) வெறுமனே ஒரு வாக்காக எண்ணிக்கை வைக்க முடியுமா? அதனால் proportional representation முறையில் ஒவ்வொரு MLA மற்றும் MP-யின் வாக்கிற்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பீடு வழங்கப்படும். ஒரு MLA-வின் வாக்குக்கு கொடுக்கப்படும் மதிப்பீடு மாநிலத்தை பொருத்து வேறுபடும், ஆனால் அனைத்து MP-க்களின் வாக்குக்கும் ஒரே மதிப்பீடு தான்.

ஒரு MLA-வின் வாக்கு அந்த மாநில மக்கள் தொகையை வைத்து கணக்கெடுக்கப்படும். இது தான் அதற்கான formula.
ஒரு MLA-வின் வாக்குக்கு அளிக்கப்படும் மதிப்பீடு = மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை/(மாநிலத்தின் மொத்த MLA-க்களின் எண்ணிக்கை * 1000)

இதனால் ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகை மற்றும் அந்த மாநிலத்தின் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையைப் பொருத்து அந்த மாநில MLA-க்களின் வாக்கு மதிப்பீடு வேறுபடும்.
எடுத்துகாட்டாக, ஒரு கோடி (1,00,00,000) மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்தின் மொத்த MLA-க்களின் எண்ணிக்கை நூறாக (100) இருக்குமானால், குடியரசுத் தலைவர் தேர்தலில் அம்மாநிலத்தைச் சேர்ந்த
                   ஒரு MLA-வின் வாக்குக்கு அளிக்கப்படும் மதிப்பீடு = 1,00,00,000/(100*1000) = 100

அதே போல் இரண்டு கோடி (2,00,00,000) மக்கள் தொகை, 150 MLA-க்கள் கொண்ட மாநிலத்தை சேர்ந்த
                   ஒரு MLA-வின் வாக்குக்கு அளிக்கப்படும் மதிப்பீடு = 2,00,00,000/(150*1000) = 80

சரி MLA-க்கள் பத்தி பார்த்தாச்சு இப்ப MP-க்களைப் பற்றி பார்ப்போம். ஒவ்வொரு மாநிலத்தைப் பொருத்து MLA-வின் வாக்குக்கு அளிக்கப்படும் மதிப்பீடு மாறும். ஆனால் இந்தியாவின் அனைத்து MP-யின் வாக்குக்கும் ஒரே மதிப்பீடு தான்.
   ஒரு MP-யின் வாக்குக்கு அளிக்கப்படும் மதிப்பீடு = அனைத்து மாநில MLA-க்களின் மொத்த வாக்கு மதிப்பீடு / மொத்த MP-க்களின் எண்ணிக்கை

வாக்களிக்கும் முறை
இப்படி MLA மற்றும் MP-க்களின் வாக்கு மதிப்பீடு பற்றி பார்த்தாச்சு.
குடியரசுத் தலைவர் தேர்தல் மற்ற பொது தேர்தல்களைப் போல் இல்லாமல் விருப்ப வரிசை வாக்கு (preferential voting) முறையில் நடத்தப்படும்.
அதாவது, எடுத்துகாட்டாக ஐந்து பேர் போட்டியிடுகிறார்கள் என்றால் வாக்காளர்கள் இந்த ஐந்து பேரில் ஒன்றாம், இரண்டாம், முன்றாம் விருப்பம் என்ற விருப்ப (preference) வரிசைப்படி வாக்களிக்கலாம்.

வாக்கு எண்ணிக்கை முறை:
வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் அனைத்து முதலாம் விருப்ப (1st preference) வாக்குகளை எண்ணுவார்கள். அதில் எவரேனும் ஒரு வேட்பாளர் ஐம்பத்தியொரு விழுக்காடிற்கு (51%) மேற்ப்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்தால் அவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். ஒருவேளை அப்படி எந்த ஒரு வேட்பாளரும் ஐம்பத்தியொரு விழுக்காடு வாக்குகளைப் பெறவில்லை என்றால் முதலாம் விருப்ப வாக்குகள் எண்ணிக்கையில் கடைசி இடம் பெற்ற வேட்பாளர் நீக்கப்பட்டு மீதமிருக்கும் வேட்பாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு அடுத்து இரண்டாம் விருப்ப வாக்குகளை மட்டும் எண்ணுவார்கள். இதில் எவரேனும் ஒருவர் ஐம்பத்தியொரு விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தால் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். இல்லையென்றால் இந்த முறை கடைசி இடம் பெற்றவர் நீக்கப்பட்டு அடுத்த நிலை விருப்ப வாக்குகளை எண்ணத் தொடங்குவார்கள். இப்படியாக ஒரு வேட்பாளர் ஐம்பத்தியொரு விழுக்காடு வாக்குகளைப் பெறும் வரையில் ஒவ்வொரு நிலையிலும் கடைசி இடம் பெற்றவர் நீக்கப்பட்டு அடுத்த நிலை விருப்ப வாக்குகளை எண்ணுவார்கள்.
இப்படி எண்ணிக்கையின் இறுதியில் வெற்றிபெற்றவர் அடுத்த குடியரசுத் தலைவராகப் பதவியேற்பார்.

No comments:

Post a Comment